search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு குளிர்சாதன பஸ்கள்"

    • அரசு போக்குவரத்து கழக பஸ்களில் சாதா பஸ்களில் எப்போதும் போல் உள்ள கட்டணம்தான் வாங்கப்படுகிறது.
    • கோடை காலத்தையொட்டி மக்கள் ஏ.சி. பஸ்களை அதிகம் விரும்புவதால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை முழு கட்டணம் வாங்கும் நடைமுறை இருக்கும்.

    சென்னை:

    கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் பலர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதும், சுற்றுலா தலங்களுக்கு போவதும் அதிகரித்து வருகிறது.

    இதற்காக பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். இதற்காக தமிழக அரசு தேவையான பஸ்களை இயக்கி வருகிறது.

    அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ்களில் மொத்தம் 1,079 பஸ்கள் உள்ளன. இதில் 1000 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. 79 பஸ்கள் மாற்று பஸ்களாக தயார் நிலையில் இருக்கும்.

    இந்த பஸ்களில் 330 பஸ்கள் குளிர்சாதன வசதி உள்ள பஸ்களாகும். இதில் கழிப்பறை வசதி உடைய பஸ்கள், குளிரூட்டப்பட்ட தூங்கும் வசதி கொண்ட பஸ்கள், சாதா ரக குளிர்சாதன பஸ்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை காலம் என்பதால் சாதா பஸ்களில் பயணம் செய்வதை விட குளிர்சாதன பஸ்களில் பயணம் செய்யவே பலரும் விரும்புகின்றனர். இதனால் குளிர்சாதன பஸ்களில் இப்போது கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஏ.சி. பஸ்களில் ஏப்ரல் 15 முதல் கட்டணம் உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அரசு போக்குவரத்து கழக பஸ்களில் எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தப்படவில்லை. ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் வரை கட்டண சலுகை இருக்கும். அது இப்போது கோடை கால விடுமுறையையொட்டி சலுகை இருக்காது.

    இந்த கட்டண நடைமுறை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. புதிது ஏதும் கிடையாது. 5 வருடமாக இது செயல்பாட்டில் உள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் சாதா பஸ்களில் எப்போதும் போல் உள்ள கட்டணம்தான் வாங்கப்படுகிறது.

    அரசு விரைவு பஸ்களில் கழிப்பறை வசதி உடைய பஸ்கள், குளிரூட்டப்பட்ட தூங்கும் வசதி உடைய பஸ்கள், தூங்கும் வசதியுடைய பஸ்கள் ஆகிய பஸ்களில் மட்டும் கட்டண சலுகை இல்லாமல் முழு டிக்கெட் கட்டணம் வாங்கப்படுகிறது.

    தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் 2018-ம் ஆண்டு முதல் இந்த கட்டண நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே வழக்கமான முழு கட்டணம்தான் வாங்கப்படுகிறது.

    கோடை காலத்தையொட்டி மக்கள் ஏ.சி. பஸ்களை அதிகம் விரும்புவதால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை முழு கட்டணம் வாங்கும் நடைமுறை இருக்கும். அதன் பிறகு கட்டண சலுகை நடைமுறைக்கு வந்து விடும். ஏ.சி. பஸ்கள் எண்ணிக்கையை குறைக்கும் எண்ணமும் அரசுக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கூறுகையில், கடந்த 5 வருடமாக பின்பற்றப்படும் நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.

    எனவே இப்போது ஏ.சி. பஸ்களில் கட்டண சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால் 65 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை வழக்கமான முழுக்கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 15-ந்தேதி வரை இது அமலில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×